ஆமேடம் எருது சுறா நண்டு கன்னி
ஐந்திடத்தில் கருநாகம் அமர்ந்து நிற்கில்
பூமேடை தனில் துயிலும் ராஜயோகம்
போற்றிடுவர் வேறு இன்னும் புகலக் கேளாய்
ஏமாறாதே நான்கு கேந்திரத்தும்
இடைவிடாமற் கிரகம் இருந்தாகில்
தேமேவு பர்வதமா யோகமாகும்
சீமான் ஆகுவான் ராஜயோகஞ் செப்பே...
தமிழ் ஜோதிட நூல்களில் மிகவும் மதிப்பு வாய்ந்ததான ”ஜாதக அலங்காரம்” ராகுவைப் பற்றி குறிப்பிடும் மேற்கண்ட பாடல்
இந்த பாடலின் முதல் மூன்று வரிகள் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து ராசிகளில் ராகு இருந்து அதனுடைய தசை வரும் போது அந்த ஜாதகருக்கு “ பூப்படுக்கையில் படுக்கும் ராஜயோகம்” எனச் சொல்லுகிறது.
அடுத்த வரிகள் நான்கு கேந்திரங்களிலும் தொடர்ந்து கிரகங்கள் இருந்தால் சிறப்பான பர்வத யோகத்தை தரும் எனக் குறிப்பிடுகிறது.
மேலே சொல்லப்பட்ட இந்த “நான்கு கேந்திரங்களில் கிரகங்கள்” எனும் அமைப்பை மேற்கண்ட ஐந்து ராசிகளில் இருக்கும் ராகுவிற்கு நான்கு கேந்திரங்களில் கிரகங்கள் இருந்தால் இந்த யோகம் என்று சிலரும், இந்த ராசிகளில் ராகு இருக்கும் நிலையில் லக்னத்திற்கு நான்கு கேந்திரங்களில் கிரகங்கள் இடைவிடாமல் இருந்தால் இது போன்ற சிறந்த பர்வதயோகம் என்று சிலரும் கருத்து வேற்றுமை கொள்கின்றனர்.
ஜாதக அலங்காரத்திலேயே இப்பாடலுக்கு லக்னத்திலிருந்து இடைவிடாமல் நான்கு கேந்திரங்களிலும் கிரகங்கள் இருந்தால் என்றுதான் விளக்கம் சொல்லப் பட்டிருக்கிறது.
உண்மை என்னவெனில் மேற்கண்ட மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய இடங்களில் ராகு அமர்ந்து இந்த பாவங்களில் இருக்கும் ராகுவிற்கு கேந்திரங்களில், அதாவது ராகுவின் முதலாம் கேந்திரமான அவர் இருக்கும் வீட்டில் அவருடன் இணைந்து ஒரு கிரகம், அடுத்து ராகுவிற்கு நான்கில் ஒன்று, அடுத்ததாக ராகுவிற்கு எதிரில் இருக்கும் கேதுவுடன் இணைந்து ஒரு கிரகம், அடுத்து ராகுவிற்கு பத்தாமிடத்தில் ஒரு கிரகம் என இடைவிடாமல் கிரகங்கள் இருந்தால் மிகப்பெரிய ராஜயோகத்தை ராகு தன் தசையில் செய்யும்.
இதுபோன்ற அமைப்பில் ராகு பதினொன்றில் இருந்தாரெனில் மற்ற அனைத்துக் கிரகங்களும் பணபரஸ்தானங்கள் என்று சொல்லப்படும் இரண்டு ஐந்து எட்டு பதினொன்றில் இருக்கும். அப்போது பாக்யாதிபதி இரண்டில் இருக்கலாம். ஜீவனாதிபதி ஐந்தில் அமர்ந்து ராகுவைப் பார்க்கலாம். தனாதிபதி எட்டில் அமர்ந்து தன் வீட்டைப் பார்க்கலாம். பஞ்சமாதிபதி ராகுவுடன் இணைந்திருந்து ஜீவனாதிபதியைப் பார்க்கலாம்.
இந்த கேந்திர அமைப்பில் ராகு அனைத்துக் கிரகங் களின் இணைப்பினால் அவர்களின் பலத்தைக் கவர்ந்து தன் தசையில் மிகப் பெரிய தனலாபத்தை பொருளாதார மேன்மை யைத் தரும்.
அதேபோல ராகு மூன்றா மிடத்தில் இருந்தாரெனில் மற்ற கிரகங்கள் ஆபோக்லிய ஸ்தானங்கள் என்று சொல்லப்படும் மூன்று ஆறு ஒன்பது பனிரெண்டு ஆகிய இடங்களில் இருக்கும். இந்த அமைப்பிலும் பாக்யாதிபதி தன் வீட்டிலோ அல்லது ராகுவுடன் இணைந்து தன் வீட்டைப் பார்வையிட்டோ மற்ற துர்ஸ்தானாதிபதிகள் ஒருவருக்கொருவர் மாறி அமர்ந்தோ இருந்தார்கள் எனில் ராகு யோகம் செய்வார்.
அதே நேரத்தில் ராகுவுக்கு நான்கு கேந்திரங்களிலும் இடைவிடாமல் கிரகங்கள் இருக்கும் நிலையில் யோகம் பூரணமாகக் கிடைக்கும். ஏதேனும் ஒரு இடத்திலோ அல்லது ராகு கேதுவுடன் கிரகங்கள் இணையாமல் ராகுவிற்கு இரண்டு பக்கங்களில் மட்டும் கிரகங்கள் இருந்தாலும் யோக அமைப்புத்தான்.
ஆனால் இந்த யோகம் செயல்பட வேண்டுமெனில் ராகுதசை வர வேண்டும். புக்திகளில் இந்த அமைப்பு பலன் அளிக்காது.